நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பாலஸ்தீன ஆதரவு பேரணி

நியூசிலாந்தின் ஆகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் பல்லாயிரம் பேர் திரண்டனர்.
இஸ்ரேலுக்கும் பாஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாசுக்கும் இடையில் காஸா போர் மூண்ட பின்னர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடைபெற்று இருக்கும் ஆகப்பெரிய பேரணி இது என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ஆக்லாந்தில் மனிதநேயப் பேரணி என்று அழைக்கப்பட்ட ஊர்வலத்தில் ஏறத்தாழ 50,000 பேர் கலந்துகொண்டதாக ஆட்டேரோவா என்னும் பாலஸ்தீன ஆதரவுக் குழு தெரிவித்தது.ஆனால், கிட்டத்தட்ட 20,000 பேர் அதில் கலந்துகொண்டதாக நியூசிலாந்து காவல்துறை மதிப்பிட்டது.
பேரணியில் பங்கேற்றோரில் பெரும்பாலானோர் பதாகைகளை ஏந்திச் சென்றனர். ‘இனப்படுகொலையை சாதாரணமாகக் கருதாதீர்’, ‘பாலஸ்தீனர்களின் முதுகெலும்பாகச் செயல்படுங்கள்’ என்பன போன்ற வாசகங்கள் அந்தப் பதாகைகளில் காணப்பட்டதாக நியூசிலாந்து அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
2023 அக்டோபரில் ஹமாஸ் குழுவின் எல்லைகடந்து நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடர்ந்து காஸா போர் தொடங்கியது.அந்தப் போரில் 64,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, போதுமான உணவு கிடைக்காததால் காஸாவில் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்து வருவதாக மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன.