இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தை திருத்துவதற்கு அனுமதி!
தற்போதுள்ள தொலைத்தொடர்பு முறை உரிமங்கள் மற்றும் அதிர்வெண் உரிமங்களுக்கு மேலதிகமாக மேலும் 3 வகையான உரிமங்கள் இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவிற்கு (CoPF) தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அந்தக் குழு கூடிய போது இவ் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த சட்டமூலம் கடந்த மே மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் மூலம், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன், உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்படுவதுடன், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்கள் பலப்படுத்தப்படும்.
தொலைத்தொடர்பு சட்டத்தை திருத்துவதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் தொலைத்தொடர்பு அதிர்வெண்களை வழங்குவதில் போட்டி முறையின் கீழ் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் என்றும் வெளிப்படுத்தப்பட்டது.
இதன்படி, அதற்கான விதிமுறைகள் நாடாளுமன்றத்தால் தொகுக்கப்பட வேண்டும், இதனால் தொலைத்தொடர்பு துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும், அத்துடன் இந்த வணிகத்தை நடத்தும் நிறுவனங்களை முறையாக ஒழுங்குபடுத்த முடியும்.