இங்கிலாந்தில் தற்காலிக குடியிருப்புகளில் வாழும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு
இங்கிலாந்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷெல்டர் (Shelter) அமைப்பு மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆய்வில், சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகள் தற்காலிக வீடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது.
முறையான வசதிகள் இல்லாததால், பள்ளிகளே மாணவர்களுக்கு உணவுக் களஞ்சியங்களைப் பரிந்துரைப்பதோடு, அவர்களின் சீருடைகளைத் துவைத்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சுமார் 49 சதவீத பள்ளிகள் மாணவர்களை உணவுக் களஞ்சியங்களுக்கு அனுப்பி வருகின்றன.
ஈஸ்ட் லண்டனைச் சேர்ந்த அலிசியா சாமுவேல்ஸ் என்ற தாய் கூறுகையில், ஈரப்பதம் மற்றும் எலிகள் தொல்லை நிறைந்த ஒற்றை அறையில் தனது மகனுடன் வசிப்பதாகவும், இது தனது மகனின் உடல்நலத்தையும் கல்வியையும் கடுமையாகப் பாதிப்பதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
வீடற்ற நிலை குழந்தைகளின் கல்வி, வருகை மற்றும் மனநலத்தை கடுமையாக பாதிக்கிறது என ஆய்வு எச்சரிக்கிறது.
வீட்டுவசதி நெருக்கடியைத் தீர்க்க அரசு ஆண்டுக்கு 90 ஆயிரம் சமூக வீடுகளைக் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





