மட்டக்களப்பில் அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை
மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளியில் வாகனங்களை நிறுத்தி போதை பொருள் கடத்தல் காரர்களை தேடி பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (06) பிற்பகல் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர் இதன்போது 2186 தடை செய்யப்பட்ட சிகரட்டுக்களை கடத்திச் சென்ற 7 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் போதை பொருள் கடத்தல்காரர்களை தேடி வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையின் பிரகாரம் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெமில் தலைமையில் மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சரத்சந்திரா உட்பட்ட போக்குவரத்து பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து மட்டு ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளி பகுதியால் பிரயாணித்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பஸ்வண்டிகளில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழ் இறக்கி அவர்களையும் அவர்களது உடமைகள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடும் நடவடிக்கை பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முன்னெடுத்தனர் இதன் போது 2186 தடை செய்யப்பட்ட சிகரட்டுக்களை கடத்திச் சென்ற 7 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.