தமிழ்நாடு – ஊண்டியலில் மாட்டிக்கொண்ட கை.. விடியும் வரை காத்திருந்த திருடன்

தர்மபுரி அருகே நள்ளிரவு நேரத்தில், கோயில் உண்டியலில் பணம் திருட முயன்றபோது, உண்டியலில் கை சிக்கி கொண்டு வெளியே எடுக்க முடியாமல் விடிய, விடிய காத்திருந்த திருடனை காவலர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் உள்ளது.சனிக்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்த மர்மநபர், அங்குள்ள உண்டியல் பணத்தைத் திருட முயற்சி செய்துள்ளார். அப்போது, உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கை உண்டியலின் உள்ளே சிக்கி கொண்டது.
நீண்டநேரம் போராடி உண்டியலில் இருந்து கையை எடுக்க முடியாமல் போனது. அதனால், செய்வதறியாமல் விடிய, விடிய உண்டியலில் கை மாட்டிய நிலையிலேயே, அந்த நபர் சோகமே உருவாக அங்கேயே அமர்ந்திருந்தார்.
இதனிடையே மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், உண்டியலுக்குள் கை மாட்டி கொண்ட நிலையில், ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து காவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த காவலர்கள் உண்டியலுக்குள் கம்பியை விட்டு, நெம்பி அவரது கையை வெளியே எடுத்து மீட்டனர்.
இதையடுத்து, அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். அதில், அவர் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்(43) என்பது தெரிந்தது.
கூலி தொழிலாளியான இவர், சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.