மும்முரமாகும் தமிழக தேர்தல் களம் – அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய விஜய்!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 06 மாதங்கள் உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பில் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க. முதலில் முச்சக்கர வண்டிச் சின்னத்தை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த சின்னம் கேரளாவில் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சுயேட்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை அக்கட்சியினர் தெரிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் விசில், உலக உருண்டை, மைக், பேட் இதில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய இருக்கிறது.
இதற்கிடையே கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்த இரண்டாம் கட்ட தலைவர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்திருந்த நிலையில், அக்கட்சியின் செயற்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.