ஸ்டார்மர், பைடன் இடையே பேச்சுவார்த்தை – உக்ரேனுக்கு எந்த உறுதிமொழியும் இல்லை
பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரேன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் சென்றுள்ளார்.
அங்கு அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் உக்ரேன் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவை தாக்குவதை அனுமதிப்பது தொடர்பாக எந்தவித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மரிடம் ரஷ்யாவுடனான போரில் உக்ரேன் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி அளிக்க பைடன் ஒப்புக்கொண்டாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், “உக்ரேன் உள்பட பல விவகாரங்கள் பற்றி பயனுள்ள விவாதம் இடம்பெற்றது. இதில் நீங்கள் எதிர்பார்த்தபடி மத்திய கிழக்கு, இந்தோ-பசிபிக் ஆகியவையும் அடங்கும்,” என்று சொன்னார்.
இந்நிலையில், வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் உயிர்க்கொல்லி ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை அறிக்கை கூறுகிறது.
முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனை நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது.அவ்வாறு அனுமதி வழங்குவது ரஷ்யாவுடன் நேட்டோ நாடுகள் நேரடியாக மோதுவதற்குச் சமமாகும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுபற்றி உக்ரேன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிறப்பு அமெரிக்கப் பிரதிநிதி கர்ட் வோல்க்கல், “ரஷ்ய அதிபரின் எச்சரிக்கை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிப்பதற்காகக் கூறப்பட்டது,” என்றார்.
“புட்டின் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் போரில் அவர் எதிர்பார்க்கும் முடிவுகளை எட்டுவதற்கும், அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் அல்லது என்ன நினைக்கிறார் என்பதற்கும் அது சிறிதும் தொடர்பில்லாதது,” என்று அவர் விளக்கினார்.
நெடுந்தொலைவு ஏவுகணைகள் தொடர்பான விவாதம் குறித்துப் பேசிய அவர், “நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்துவது ஏதோ புதிய தாண்டக்கூடாத எல்லைக் கோடு போலவும் அதைத் தாண்டினால் அது ரஷ்யா போரை விரிவுபடுத்த தூண்டுவது போல் ஆகிவிடும் என்ற மிகைப்படுத்தப்பட்ட உணர்வில் அமெரிக்கா இருக்கிறது,” என்று சொன்னார்.