ஆப்கானில் தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலி நிலையத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கிய தலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது.
வயது வந்த பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடைவிதிக்கப்பட்டது. சிறுமிகளாக இருந்தாலும்கூட சிறுவர்களுடன் இணைந்து கல்வி பயில தடை எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தவிர, ஆடை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு ஆண் துணையின்றிச் செல்லக்கூடாது என்பதுடன் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மட்டும் இயக்கும் வகையிலான வானொலி நிலையம் ஒன்று ‘ரேடியோ பேகம்’ எனும் பெயரில் தொடங்கப்பட்டது. அந்த வானொலியில் ஒலிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆப்கானின் பெண்களினால் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
இந்த வானொலியின் துணை நிறுவனமான ‘பேகம் டிவி’ எனும் தொலைக்காட்சி பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆப்கானினுள் இயங்கி, பள்ளி மாணவிகளுக்கு ஆப்கானின் கல்வி பாடத்திட்டை நிகழ்ச்சியாக ஒளிபரப்பி வந்தது. இந்த வானொலி நிலையம் நிறுவப்பட்ட 5 மாதங்களில் அந்நாட்டில் தாலிபன்கள் ஆட்சியமைத்தனர்.
அவர்களது ஆட்சியின்கீழ் 6ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு தொலைக்காட்சி சேனலுக்கு அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தை வழங்கியதாகவும், அதன் உரிமத்தை முறையற்று பயன்படுத்தியதாகவும் கூறி தாலிபன் அரசு அந்த வானொலி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி தடை விதித்தது.
இந்த நிலையில், நேற்று தலிபான் அரசின் செய்தி மற்றும் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ரேடியோ பேகம்’ வானொலி மீண்டும் இயக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து அவர்கள் கேட்டுகொண்டதனால், அதன் மீதான தடை விலக்கப்பட்டு இயக்கப்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் அமீரகத்தின் ஊடகத்துறை கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு விதிமீறல்களிலும் ஈடுபட மாட்டோம் என அந்நிறுவனம் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.