தாக்குதல் ஆயுதங்களாக மறுவடிவம் பெறும் தைவானின் உளவு ட்ரோன்கள்
சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டால் அதற்கு தயாராகும் விதமாக தைவான் தங்களது கண்காணிப்பு ட்ரோன்களில் லேசர் இலக்கு தாக்குதல் மற்றும் வெடிகுண்டு அமைப்பை கூடுதலாக உட்சேர்த்து வருகிறது.
சுதந்திர தீவு நாடான தைவானை சீனா தங்களுடைய நாட்டின் ஒரு அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனாவின் கூற்றுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது.இதனால் ஆத்திரமடைந்த சீனா, அவ்வப்போது தைவான் சர்வதேச கடல் பிராந்தியத்தில் போர் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தைவானும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் ராணுவ ஆதரவை திரட்டி வருகிறது.சீனாவுடனான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தைவான் தன்னுடைய தந்திரோபாய உளவு ரோட்டார் ட்ரோன்களை லேசர் இலக்கு தாக்குதல் மற்றும் வெடிமருந்து உள்ளடக்கிய தாக்குதல் ட்ரோன்களாக மறு உருவாக்கம் செய்து வருகிறது.
சீனாவுடன் போர் ஏற்பட்டால் அதன் சீன மக்கள் விடுதலை இராணுவத்தை எதிர்த்து சண்டையிட இந்த மறு வடிவமைக்கப்பட்ட தாக்குதல் ட்ரோன்கள் உதவிகரமாக இருக்கும் என தைவான் தெரிவித்துள்ளார்.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் அறிக்கைப்படி, சுமார் 25.1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் மொத்தமாக 50 தந்திரோபாய ட்ரோன்களை தைவானின் ஆயுத கட்டுமான நிறுவனமான தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் தைவான் அரசு ஆர்டர் செய்து இருந்தது.இவற்றில் 14 ட்ரோன்கள் கடந்த 2022ல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 36 ட்ரோன்கள் 2023ல் விநியோகிக்கப்பட்டு உள்ளது.