உடலில் பிரச்சனை உள்ளதை காட்டும் அறிகுறிகள்

நமது வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க, உடல் ஆரொக்கியம் மிக அவசியம். நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். நாம் உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்ள பல விதமான முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், நாம் என்ன செய்தாலும், சில நோய்கள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
உடல் ஆரோக்கியம் குறித்த சில அறிகுறிகளை நம் உடல் நமக்கு காட்டுகின்றது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த அறிகுறிகள் மூலம் நாம் அவற்றை அடையாளம் காணலாம். இவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக செயல்பட்டு, தேவையான சிகிச்சைகளை எடுத்தால், நாம் நமது ஆரோக்கியத்தை காக்க முடியும். நம் உடல் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை காட்டும் அந்த அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சோர்வு
போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு உள்ள போதிலும், உடல் எப்போதும் சோர்வாக (Fatigue) இருந்தால், உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் பி-12 மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உணவில் போதுமான பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம் போன்றவை சேர்க்கப்படவில்லை என்பதையும் இந்த அறிகுறி காட்டுகிறது. இதற்கான சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்கவில்லை என்றால், ஹீமோகுளோபின் குறைபாடு, இரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
முடி உதிர்தல்
முடி உதிர்தல் (Hair Fall) பிரச்சனை பொதுவான ஒரு பிரச்சனை ஆகும். ஆனால் தினமும் எவ்வளவு முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியது மிக அவசியம். இது அதிகமாக இருந்தால், இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். முடி உதிர்தல் பிரச்சனை புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் டி போன்ற சத்துக்களின் குறைபாட்டுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. வைட்டமின் டி குறைபாடு அதிகரிப்பதால், எலும்புகளும் பலவீனமடையத் தொடங்கும்.
நகங்கள் பலவீனமாக உடையக்கூடிய நிலையில் இருப்பது
மிகவும் உலர்ந்த, கடினமான மற்றும் லேசான நகங்கள் (Nails) பிரச்சனைக்குரிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. நகங்கள் வலிமை குறைவாகவும், எளிதில் உடையக்கூடியவையாகவும் இருந்தால் உடலில் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து போன்ற தனிமங்களின் குறைபாடாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள எலும்புகள் உள்ளிருந்து வலுவிழந்து வருவதையும் இத்தகைய நகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வறண்ட சருமம்
சருமம் (Skin) வறண்டு, வெடிப்புகளோடு, செதில்களாக காணப்பட்டால், இவை நீரிழப்பு பிரச்சனையை குறிக்கின்றன. அந்த சமயத்தில் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமம் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியாவற்றின் குறைபாட்டை குறிக்கின்றது. இந்த வைட்டமின்கள் குறைபாடு காரணமாக, முகத்தில் புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
சளி, காய்ச்சல்
அவ்வப்போது சளி அல்லது வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட்டால், அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதை நேரடியாகக் காட்டுகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி நோய்களைத் தூண்டுகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்ற குறைபாட்டின் அறிகுறியாகவும் கருதப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வதே சிறந்த வழியாகும்.
தசை வலி, பிடிப்புகள்
எப்போதும் உடல் வலி (Pain) உள்ளவர்களுக்கு தசைகள் பலவீனமாக இருக்கும். பலவீனமான தசைகள் எலும்புகளில் வலியை ஏற்படுத்துகின்றன. நீரிழப்பும் தசை பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது. உடலில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் குறைபாட்டால் தசைகளில் வலி ஏற்படுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆரோக்கியமான உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களாகும்.
மீட்பு மெதுவாக இருப்பது
காயங்கள் குணமடைய அதிக நேரம் எடுப்பதும் உடலில் உள்ள சில பற்றாக்குறைகளின் அறிகுறியாகும். உடலில் ஜிங்க், வைட்டமின் சி மற்றும் புரதச்சத்து ஆகியவற்றின் குறைபாடு இருந்தால், இந்த பிரச்சனை ஏற்படுகின்றது.