ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை தற்காலிக கேப்டனாக வழிநடத்திய ரியான் பராக் சிறப்பாக கேப்டன்சி செய்த காரணத்தால் பாராட்டுகளை வாங்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் முழுவதும் அவருக்கு தான் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னாவிடமிருந்து பாராட்டை பெற்றார். ” ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ரெய்னா பாரக்கை பாராட்டி சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ரியான் பராக், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் தனது கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது பெற்றிருக்க வேண்டும்.
பராக் ஒரு இளம் கேப்டன் தான். கேப்டனாக விளையாடுய அனுபவம் அவருக்கு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சென்னைக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் அழுத்தமான சூழலில் அமைதியாகவும், தெளிவாகவும் முடிவெடுத்தார். கேப்டனாக இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்று. கடைசி நேரத்தில் அவரது பந்துவீச்சு திட்டமிடல் மற்றும் வீரர்களை பீல்டிங்கிற்காக நிற்க வைத்த இடம் என அனைத்தும் பக்காவாக இருந்தது.
அவர் அசாம் அணியை வழிநடத்திய அனுபவத்தை ஐபிஎல்லில் காட்டினார். இது அவருக்கு மட்டுமல்ல, ராஜஸ்தான் அணிக்கும் ஒரு பெரிய முன்னேற்றம். அவர் எப்படி ஹசரங்காவை பயன்படுத்தினார், கடைசி ஓவரை சந்தீப் சர்மாவிடம் கொடுத்தார் என்பது அற்புதமான முடிவு. அங்கு தான் அவரும் ஒரு சிறந்த கேப்டன் என எனக்கு தெரிந்தது. சென்னையைப் போன்ற ஒரு வலுவான அணியை, அதுவும் தோனி இருக்கும்போது, கட்டுப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை. பராக் இப்போது பேட்டிங்கில் மட்டுமல்ல, கேப்டன்சியிலும் தன்னை சிறந்தவர் என்று நிரூபித்து இருக்கிறார்” எனவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.