பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர், அவருக்கு எதிராக நிறைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்க கோரி, கடந்த மே 9 அன்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பொருட்களை சூறையாடினர். இதனால், அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதிவாகின.
இந்நிலையில், மே 9 அன்று நடந்த வன்முறை வழக்கில் இம்ரான் கானுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி அப்ரிடி மற்றும் நீதிபதிகள் ஷபி சித்திக் மற்றும் மியாங்குல் அவுரங்கசீப் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இதில், இம்ரான் கானை விடுதலை செய்து நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இது இம்ரான் கானுக்கு கிடைத்த வெற்றி என அவருடைய தெஹிரிக் – இ – இன்சாப் கட்சி பாராட்டியுள்ளது.
இன்னும் அவர் ஒரு வழக்கில் (அல் காதிர் வழக்கில்) இருந்து விடுதலையாக வேண்டி உள்ளது என அக்கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி தெரிவித்துள்ளார்.