வல்லரசான அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள மூடநம்பிக்கை – 13 என்ற இலக்கத்தில் மர்மம்
அமெரிக்காவில் 13 என்ற இலக்கம் தொடர்பில் மூடநம்பிக்கை நீண்டகாலமாக நீடித்து வருவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக நியூயோர்க்கில் இந்த மூட நம்பிக்கை அதிகரித்துள்ளதுடன், 13 என்ற இலக்கத்தை பலரும் வெறுப்பதாக தெரியவந்துள்ளது.
கட்டடத்துறை சார்ந்த துறையில் பணியாற்றுவோர், தாம் நிர்மாணிக்கும் கட்டடங்களில் 13 என்ற தளத்தை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.
பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13ஆவது தளம் இல்லாத பல கட்டடங்கள் நியூயார்க்கில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்ட்ரீட் ஈஸி (StreetEasy) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதற்கமைய 13 அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட 629 கட்டடங்களில் 9 சதவீதம் மட்டுமே உத்தியோகபூர்வமாக 13வது தளத்தைக் கொண்டவை என பெயரிடப்பட்டுள்ளன.
இதில் 90 வீதத்திற்கும் அதிகமான கட்டடங்களில் 12வது தளத்திற்கு பின்னர் 13வது தளத்தைத் தவிர்த்து 14வது தளம் என பெயரிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் பெரும்பாலான மக்கள் குடியிருப்பில் 13வது மாடி இல்லை எனத் குறிப்பிடப்படுகிறது. சுமார் 5 வீத கட்டடங்களிலேயே 13வது தளம் உள்ளமை தெரிய வந்துள்ளது.
கட்டட நிர்மாணத்துறையினர் மத்தியில் இந்த மூட நம்பிக்கை தீவிரம் அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மிகவும் மக்கள் நெரிசல் கொண்ட நியூயார்க்கில் இந்த மூட நம்பிக்கை காரணமாக கட்டட விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக துறைசார் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல அமெரிக்க அறிவிப்பாளர் ஆண்டி கோஹனின் வெஸ்ட் வில்லேஜ் டூப்ளக்ஸ் கூட 12 மற்றும் 14வது தளங்களில் அமைந்துள்ளது; அங்கு 13 என்ற எண் தவிர்க்கப்பட்டுள்ளது.
மின்தூக்கி (லிஃப்ட்) பொத்தான்களிலிருந்து 13வது மாடியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 12A அல்லது ‘M’ போன்ற புனைப்பெயர்களைப் பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாக உள்ளது.
2002ஆம் ஆண்டில் ஓடிஸ் எலிவேட்டர்ஸ் (Otis Elevators) நடத்திய ஆய்வில் 85% கட்டடங்களின் மின்தூக்கிகள் 12 இலிருந்து 14 ஆகத் செல்வதாக கண்டறியப்பட்டது.
மக்களின் இவ்வாறான நடைமுறை மூட நம்பிக்கையின் உச்சம் என, கட்டடக்கலை வரலாற்றாசிரியர் ஆண்ட்ரூ டோல்கார்ட் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மூடநம்பிக்கையை 2015ஆம் ஆண்டு முதல் கனடாவின் வான்கூவர் நகரம் முற்றிலுமாக தடை செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது.





