தரமற்ற தேங்காய் எண்ணெய் : சுற்றிவளைத்த அதிகாரிகள்
பிலியந்தலை, போகுந்தர பிரதேசத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் புதன்கிழமை (செப். 27) கடையில் சோதனை நடத்தினர்.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தரச் சான்றிதழை, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், அதன் பெயர் பலகையில், கடையில் போலியாக காட்சிப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபையின் தர நியமச்சான்றிதழ், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளைக் காட்டுகின்ற பாட்டில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் கடைகளுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது.
எனினும் குறித்த கடையில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தர நியமச் சான்றிதழின் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு கேன்கள் மற்றும் ஏனைய கொள்கலன்களில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
கடையை சோதனையிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், சில்லறை விற்பனைக் கடையில் விற்கப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கடையில் இருந்த 19 லிட்டர் தரமற்ற தேங்காய் எண்ணெயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.