டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள் : சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
இலங்கையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானோர் மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அச் சபையின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கடந்த சில மாதங்களில் 42,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மொத்த டெங்கு நோயாளர்களில் 50% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள ஆண்டாக இந்த வருடம் அமையும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலை மேலும் மோசமடைந்து பாரியளவில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.