கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று திடீர் வேலைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய, இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மற்றும் நிர்வாக மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, அவரை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள போதனா வைத்தியசாலை உட்பட சுமார் 180-க்கும் மேற்பட்ட சுகாதார மத்திய நிலையங்களில் வெளிநோயாளி சிகிச்சை பிரிவுகள் செயலிழந்துள்ளன.
எனினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் உயிர்காக்கும் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உரிய தீர்வு கிடைக்காவிடின் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப் போவதாக சங்கம் எச்சரித்துள்ளது.





