சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூட நடவடிக்கை எடுக்கப்படலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது,
” தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை ஆனால் யாரோ சிலர் திட்டமிட்டு அது போன்று வதந்திகளை பரப்புகின்றனர்.
அது தவிர பல பொய்யான செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அவ்வாறு சமூக வலைத்தளங்கள் மூலம் பொய் செய்திகளை பரப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகின்றனர்.
வெவ்வேறு விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்தி பரப்பியதாக இரண்டு நபர்கள் மீது திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்புவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
சிலர் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் தன்னால் அது நடந்தது என்கிற ஒரு மனோபாவத்தின் காரணமாக வதந்திகளை பரப்புகின்றனர்.
பொதுமக்கள் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அவசர உதவி எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது.
திருச்சி மாவட்டம், துறையூரில் நடந்த இரட்டை கொலை, கொள்ளிடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஆகியவை குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவாக கொலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் முன்னேற்பாடுகளை திருச்சி மாவட்ட காவல்துறை செய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 82வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
குழந்தை கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நாளை முதல் போலீசார் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்” என்றார்.