போரை உடனடியாக நிறுத்துங்கள் ; 187m உயர கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஸ்பைடர் மேன்

காஸா மீதான இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்தக்கோரி பிரான்ஸில் 187 மீட்டர் உயர கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசிய ஹமாஸ் அமைப்பினர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.
இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள். சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. உலக நாடுகளை கவலையடைய செய்துள்ள இந்த போர் ஒருமாதத்தை எட்டியுள்ளது.
இந்த போரில் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை 9,500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை கண்டித்து பிரான்ஸில் ஸ்பைடர் மேன் என்றழைக்கப்படும் அலைன் ராபர்ட் என்பவர் 187 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அதையடுத்த அங்கு விரைந்து வந்த பொலிஸார் அவரிடம் ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி கீழே இறங்கச் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
https://twitter.com/i/status/1721645864320479259