இளவாலையில் போதைப்பொருளுடன் கைதான இளைஞரிடமிருந்து திருட்டு நகைகள் மீட்பு!
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பொலிஸாரின் விசாரணைகளின் போது, கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வீடொன்றில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவத்துடன் இவருக்குத் தொடர்பிருப்பது அம்பலமானது.
அந்த வீட்டிலிருந்து ஒன்பதரை பவுண் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டிருந்தது.
சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து ஒரு தங்கமாலை, ஒரு தங்க மோதிரம், ஒரு சோடி தோடு, 2 தங்க வளையல்கள் மற்றும் 2 தங்கப் பதக்கங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 8 ஆயிரத்து 200 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது .
திருடப்பட்ட தங்கமாலையை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததற்கான பற்றுச்சீட்டும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அடகு வைக்கப்பட்டுள்ள தங்கமாலையை மீட்கப் பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இளவாலை பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.





