இலங்கை : காட்டு யானைகளை விரட்ட GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை!
இலங்கை – அனுராதபுரத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, காட்டு யானைகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட காலர்களை அணியும் நடவடிக்கை ஓயமடுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் நடமாடும் இடங்களை கண்டறிந்து அவற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்யும் நோக்கத்தில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கணக்கெடுப்புகளின்படி, இலங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளில், யானைக்கு முக்கிய இடம் உண்டு.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கையின் பல பகுதிகளில் இருந்து தினமும் காட்டு யானை சேதங்கள் பதிவாகி வருகின்றன.
அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தில் இவ்வாறான பயிர்ச் சேதங்கள் அதிகம் இடம்பெறும் காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்கு விரட்டும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைவாக அநுராதபுரம் காட்டு யானைகளை வில்பத்து தேசிய பூங்காவிற்கு விரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதன் மூலம் பல பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.