பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க நடவடிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கூகுளின் ‘இன்ஆக்டிவ் பாலிசி’யை அப்டேட் செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கொள்கைகள் மே 16 முதல் அமலுக்கு வரும் என்றும், டிசம்பர் முதல் செயல்படாத கணக்குகளை அகற்றத் தொடங்கும் என்றும் கூகுள் கூறுகிறது.
கூகுள் கணக்கை நீக்கிய பிறகு, அந்த கணக்கு தொடர்பான ஜிமெயில், டொக்ஸ், டிரைவ், மீட், கேலெண்டர், யூடியூப் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற சேவைகளும் முடக்கப்படும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அந்தக் கணக்குகளை நீக்குவதற்கு முன் பல அறிவிப்புகள் செய்யப்படும் என்றும், சரியான பதில் அளிக்கப்படாவிட்டால், கணக்கு நீக்கப்படும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும், கூகுள் கணக்கை அகற்றுவதைத் தடுக்க அதை எவ்வாறு செயலில் வைத்திருப்பது என்பதையும் நிறுவனம் விளக்கியுள்ளது.
அதன்படி, இரண்டு ஆண்டுகளாக செயலிழந்த கூகுள் கணக்கில் ஒருமுறை ‘உள்நுழைவு’ செய்வதன் மூலம், அந்த கணக்கு அகற்றப்படுவதை தடுக்க முடியும்.
இது தவிர, மின்னஞ்சல்களை அனுப்புதல்/படித்தல், கூகுள் டிரைவைப் பயன்படுத்துதல், யூடியூப் பயன்படுத்துதல், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் தேடலைப் பயன்படுத்துதல், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது கூகுள் கணக்கைப் பயன்படுத்தி சேவையில் உள்நுழைதல் போன்றவற்றின் மூலம் உங்கள் கூகுள் கணக்கின் செயல்பாட்டை எளிதாகப் பராமரிக்கலாம் என்று அந்த நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.