ஸ்டார்பக்ஸ் தேநீர் தீக்காயங்கள் தொடர்பான வழக்கு ; 50 மில்லியன் டொலர் இழப்பீடு நீதிமன்றம் உத்தரவு

விநியோக ஓட்டுநர் ஒருவரது மடியில் தேநீர் கொட்டிக் கடுமையான தீப்புண் காயங்களை விளைவித்ததை அடுத்து அவருக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலரை (S$66,061,250) இழப்பீட்டுத் தொகையாக வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைக்கல் கார்சியா என்ற அந்த நபரிடம் தேநீர் தயாரித்த கடை ஊழியர் பானத்தைத் தந்தபோது, அது நபரது மடி மீது தவறுதலாகக் கொட்டியது. இதனால், நபரின் பிறப்புறுப்பு உட்பட மடிப்பகுதியில் கடுமையான தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.
நிறுவனத்தின் ஊழியர் பானத்தை ஒழுங்காகத் தராத காரணத்தால் ஸ்டார்பக்ஸ் அதன் கடமையைச் சரிவர செய்யத் தவறியதாக 2020ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
மாற்றுத்தோல் அறுவை சிகிச்சையுடன் வேறு பல சிகிச்சைகளை நபவர் செய்துகொள்ள வேண்டியிருந்தது.
மைக்கலுக்கு நேர்ந்த காயங்களால் அவருக்கு நிரந்தர, மீண்டும் மீட்க முடியாத தோற்றச் சிதைவு ஏற்பட்டதாக அவரின் வழக்கறிஞர் சுட்டினார்.
வாடிக்கையாளரின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், நடந்த செயலுக்குப் பொறுப்பேற்கவும் தவறிய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு இத்தீர்ப்பு விதிக்கப்பட்டது மிக முக்கியமான ஒரு முடிவு என்றார் அவர்.
இதையடுத்து, நடந்த விபத்துக்குத் தான் காரணம் இல்லை என்று கூறும் ஸ்டார்பக்ஸ், இந்த ‘அதிகப்படியான’ இழப்பீட்டுத் தொகைக்கு எதிராகத் தான் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.