கிறிஸ்மஸ் மரம் போன்ற தோற்றத்தில் ஒளிர்ந்த நட்சத்திரக்கூட்டம் – நாசா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்!(வீடியோ)
உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தைக் கொண்ட நட்சத்திரக்கூட்டங்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டிசம்பர் 25ல் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்மஸ் மரம் போன்ற வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரா கண்காணிப்பகம் படம் பிடித்துள்ளது. நமது பால்வழி அண்டத்தில் சூரிய குடும்பத்துக்கு அடுத்தப்படியாக பச்சை நிறத்தில் இந்த விண்மீன் திரள்கள் காட்சியளிக்கின்றன.
https://twitter.com/i/status/1737133820531581106
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ள நிலையில், வியப்பூட்டும் இந்தப் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. NGC 2264 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய விண்மின் திரள்களில் உள்ள நட்சத்திரங்களுக்கு ஒன்று முதல் 5 கோடி ஆண்டுகள் வரை வயது இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரங்களில் சில பூமியை விட சிறியவை, மற்றவை சூரியனைவிட பெரியவை. அவற்றின் எடை சூரியனின் எடையில் பத்தில் ஒரு பங்கிற்கு குறைவானதாகவும் ஒரு சில சூரியனின் எடையை விட ஏழு மடங்கு அதிகமாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நட்சத்திரங்களின் சுழற்சி மற்றும் ஒளியின் அடிப்படையில் தற்போது பச்சை நிறத்தில் கிறிஸ்மஸ் மரம் போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பதாகவும் விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.