திருகோணமலையில் பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை – அவதியுறும் நோயாளிகள்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அவதியுற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு விபத்து சேவை பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளில் சிற்றூழியர்கள் குறைந்த அளவில் கடமையாற்றி வருவதினால் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்றவற்றை பரிசோதனை செய்வதற்காக நோயாளர்களை கொண்டு செல்வதற்கு சிற்றூழியர்கள் குறித்த பிரிவுகளில் இல்லாமையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் நோயாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போதைய நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்ததாகவும் அன்று தொடக்கம் இன்று வரை ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை தகுதி வாய்ந்த உத்தியோகதரொருவர் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 80 ற்கும் மேற்பட்ட சிற்றூழியர்கள் தேவைப்படுவதாகவும் தற்போதைய ஊழியர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்ய முடியாத நிலைக்கும், மன உளைச்சலுக்கும் மத்தியில் இரவு பகலாக விடுமுறை இன்றி கடமையாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் மத்திய அரசாங்கம் குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் நலன் தொடர்பில் கரிசனை காட்டுவதில்லை எனவும் ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களின் நலன் கருதி இந்த அரசாங்கம் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.