பாரிஸின் ரயில் நிலையத்தில் கத்திக் குத்து தாக்குதல் : மூவர் படுகாயம்!
பாரிஸில் உள்ள முக்கிய கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
வரும் மாதங்களில் கோடைக்கால விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த சம்பவம் தோற்றுவித்துள்ளது.
பாரிஸ் பொலிசார் கூறுகையில், காலை 8 மணியளவில் தாக்குதலில் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்திய தாக்குதலாளியை அதிகாரிகள் விரைவாகக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
10,500 ஒலிம்பியன்கள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்கத் தயாராகி வரும் பாரிஸில் ஜூலை 26 அன்று சீன் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய திறந்தவெளி விழாவுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.