33 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கை தோல்வி
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 427 ஆகும்.
ஜோ ரூட் 143 ஓட்டங்களையும், குட் அட்கின்சன் 118 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 05 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 196 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
கமிந்து மெண்டிஸ் 74 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், குட் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன் மற்றும் மேத்யூ போர்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் இலங்கையை விட 231 ஓட்கங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்தது.
ஜோ ரூட் 103 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியால் 292 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பந்துவீச்சில் குட் அட்கின்சன் 05 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியது.
இதேவேளை, 1991 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.
1991ல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பிறகு 2002, 2006, 2011, 2014 மற்றும் 20216 ஆகிய ஆண்டுகளில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன, ஆனால் அவை அனைத்தும் வெற்றி அல்லது தோல்வியின்றி முடிந்தது.