‘டிட்வா’ சூறாவளி ஏற்பட முன்னர் 25 முறை இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
நவம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் 25 சந்தர்ப்பங்களில் ‘டிட்வா’ சூறாவளி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவலை கூறியுள்ளது.
‘டிட்வா’ சூறாவளி குறித்த முன்கூட்டிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள அனர்த்த சூழ்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயல்பாடு குறித்து தவறான தகவல்கள் பெருமளவில் பரவி வருவதாகவும், இந்தத் தவறான தகவல்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் நம்பகத்தன்மையைக் கெடுப்பதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில காலநிலைப் புயல் மாற்றங்களை ஒரு வாரத்திற்கு முன்னரே அடையாளம் காண முடியும் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் மிகக் குறுகிய கால முன்கூட்டியே மட்டுமே அவற்றைக் கண்டறிய முடியும்.
‘டிட்வா’ சூறாவளி உருவாவதை இந்நாட்டு விஞ்ஞானிகள் முதன்முதலில் நவம்பர் மாதம் 23ஆம் திகதியே அடையாளம் கண்டதாகவும், இந்தத் தகவலை உடனடியாக மீனவர் மற்றும் கடற்படை சமூகத்தினருக்குத் தெரிவித்ததாகவும் இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், வரவிருக்கும் புதிய காலநிலைகளை குறித்து பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்த நவம்பர் 24ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் நவம்பர் 25ஆம் திகதி தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக அம்பர் (மஞ்சள்) வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அன்றைய தினமே பிற்பகலில் சில பகுதிகளில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என சிவப்பு வண்ண அறிவிப்பும் வெளியிடப்பட்டதாகவும் அச சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த எச்சரிக்கைதான் ‘டிட்வா’ அமைப்பின் ஆரம்ப கட்டத்தில் விடுக்கப்பட்ட முதல் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு. ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ சூறாவளியாக மாறுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும், அன்றைய தினமே புதிய தகவல்கள் குறித்து பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
இதன்படி, நவம்பர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை ‘டிட்வா’ சூறாவளி தொடர்பாக 25 சிவப்பு அறிவிப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





