மியன்மாரில் பயங்கர குழு ஒன்றிடம் சிக்கியுள்ள இலங்கையர்கள்!! மீட்பு நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சு
மியன்மாரின் மியாவாடி பிரதேசத்தில் தற்போது சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பிரச்சினை தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் அந்நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மியன்மார் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் யு தான் ஸ்வே ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிக்க மியன்மார் அரசாங்கத்தின் ஆதரவும் அவசரத் தலையீடும் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மியன்மார் வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த தகவலின்படி, சைபர் குற்றங்களுக்காக மனித கடத்தலுக்கு ஆளான 56 இலங்கையர்கள் மியாவாடி பகுதியில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வழிகளையும் மேற்கொள்வதாகவும், அதற்காக மியன்மார் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து விரைவில் இலங்கையர்களை அழைத்து வர முயற்சிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.