மலேசியாவில் மூன்று கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் பொலிஸில் சரணடைந்தனர்
மலேசியாவின் செந்தூலில் நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கோலாலம்பூர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் மூன்று இலங்கையர்களும் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக கோலாலம்பூர் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், சந்தேகநபர்களான இரு இலங்கையர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், கொலையில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு இலங்கையர்கள் இன்று கோலாலம்பூர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டின் ஸ்டோர் அறையில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.
சடலங்களின் கைகள் மற்றும் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு, அவர்களின் தலைகள் பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் ஒருவரின் சடலம் அகற்றப்பட்டதாகவும், சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
ஐந்து அறைகளைக் கொண்ட இந்த வீட்டை 40 வயதுடைய இலங்கை தம்பதியரும், அவர்களது 20 வயது மகனும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்த வீட்டின் 20 வயதுடைய மகனும் ஏனைய இரு இலங்கையர்களுமே உயிரிழந்துள்ளனர். கொலை நடந்த போது பெற்றோர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.