பிரித்தானியாவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி – நபர் ஒருவர் கைது

இங்கிலாந்தில், கார்டிப் நகரில், வீதியொன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை தொடர்பில், 37 வயது இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலை 7:37 மணியளவில் கார்டிஃப் நகரின் சவுத் மோர்கன் பிளேஸ் என்ற இடத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெற்கு வேல்ஸ் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 32 வயதான நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலப்னி நிவுன்ஹெல்ல என்ற பெண்ணை உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்டனர்.
நிரோதா என அழைக்கப்பட்ட குறித்த பெண்ணை நன்கு அறிந்திருந்த திசர வெரகலகே என்ற 37 வயதுடைய இலங்கை இளைஞன், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சீவோல் ரோட் பகுதியில் வைத்து பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் குறித்த இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கார்டிஃப் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது சவுத் மோர்கன் பிளேஸ் அல்லது சீவோல் வீதி பகுதியில் சாம்பல் நிற ஃபோர்ட் ஃபியஸ்டா காரைக் கண்டவர்கள், அது பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.