நண்பரின் விசாவில் பிரித்தானியா செல்ல முயற்சித்த இலங்கை தமிழர்!
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவர் ஒருவர், தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணம் செய்ய உதவிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய (KIA) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டியை பிறப்பிடமாக கொண்ட ராஜகோபால் என்ற நபர் தனது விசா மற்றும் போர்டிங் பாஸை தனது நண்பர் சருஷன் குணசேகரனிடம் கொடுத்து அவரை பிரித்தானியாவிற்கு செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது.
பயணிகள் பரிமாற்றப் பகுதியில் விமானத்திற்காகக் காத்திருந்த ராஜகோபால், தனது ஆவணங்களை தொலைத்துவிட்டதாகவும், மாற்று ஆவணங்களைப் பெற முயன்றதாகவும் முறைப்பாடு அளித்துள்ளார்.
இருப்பினும், காவல்துறையினரின் தொடர் விசாரணைகளில் அவரின் உண்மையான நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்கமைய ராஜகோபால் ஏற்கனவே தனது நண்பரை தனது ஆவணங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு அனுப்பியதாகவும், விமான நிலையத்தில் சந்திக்கச் சொன்னதாகவும் தெரியவந்துள்ளது.
அவரது நண்பர் இங்கிலாந்து சென்ற பிறகு, ராஜகோபால் தனது ஆவணங்கள் காணாமல் போனதாகப் முறைப்பாடு செய்து புதிய ஆவணங்களை பெற்றுக்கொண்டப்பின் பிரித்தானியா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ராஜகோபாலும் அவரது நண்பரும் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்தைப் பெற முயற்சித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் ராஜகோபால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நண்பர் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





