நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய 3 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மேலும் 3 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 1 இழுவை மடி படகுடன் இந்த மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
முறையான அனுமதிப்பத்திரமின்றி இலங்கை எல்லைக்குள் நுழைந்தது மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இவர்களையும் சேர்த்து தற்போது வரை மொத்தம் 52 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டில் மட்டும் இதுவரை 43 படகுகளுடன் 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 249 படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





