இலங்கை செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

240 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள, புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று மாத்திரம் அகழ்ந்து எடுக்கப்படமால் காணப்படுகின்ற, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியான செம்மணிப் புதைகுழியில் அகழ்வாய்வுகள், நிதி ஒப்புதல் அளிக்கப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னர் வழங்கப்பட்ட நிதியில் 45 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் இன்றைய தினம் (செப்டெம்பர் 6) நிறைவடைந்ததோடு, 239 எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
மேலும், அகழ்வாய்வின் போது குவியல்களாக அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புகள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுககு தகவல்களை வழங்கினார்
“எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக எலும்புகள் குவியல்களாகவும் 14 எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை பிறபொருட்களாக 72ற்கும் மேற்பட்டவை எடுக்கப்பட்டுள்ளன”
மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும்.
தற்போதைய அகழ்வாய்வுப் பகுதிக்கு வெளியே மனித எலும்புகள் இன்னும் இருக்கலாம் என்பதற்கான புவியியல் ஆய்வின் மூலம் சான்றுகள் தெரியவந்துள்ளதால், அகழ்வாய்வுப் பணியைத் தொடர எட்டு வார கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளதாக, ஓகஸ்ட் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவானிடம் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுப் பணிகளுக்காக முன்மொழியப்பட்ட பாதீடு குறித்த அறிக்கையை அடுத்த நீதிமன்ற திகதியான செப்டெம்பர் 18 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார் என, பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
அகழ்வாய்வு இடம் தொடர்பான பல நிபுணர் அறிக்கைகளும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அமர்ந்த நிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 227ஆம் இலக்க எலும்புக்கூடு மற்றும் மண் மாதிரி மேலதிக பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வு தளம் ஒன்று 23 மீட்டர் 40 சென்டிமீட்டர் நீளமும் 11 மீட்டர் 20 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக விரிவடைந்துள்ளது.
பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின.