இலங்கை அரசாங்கம் முன்னாள் அமைச்சர்கள் 40 பேரை கைது செய்யவுள்ளது – விமல் வீரவன்ச

ஜனாதிபதி செயலகம் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்பட வேண்டிய 40 அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியவர்களின் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த கைது நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்து செயற்படும் ஒரு நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் குறித்த பட்டியல் தொடர்பான மேலதிக நடவடிக்கை வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று வருவதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, விமல் வீரவன்ச, காஞ்சன விஜேசேகர மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரின் பெயர்கள் கைது செய்யப்பட வேண்டிய 40 பேரின் பட்டியலில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தப் பட்டியலின் ஊடாகவே கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்குப் பிறகு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவரையும் கைது செய்யாமையின் காரணமாகவே கடந்த தேர்தலில் வாக்குகளை இழந்ததாக அரசாங்கம் கருதுகிறது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.