வெளிநாட்டில் அறை கிடைக்காமல் தரையில் அமர்ந்திருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டது.
ஏறக்குறைய 20 மணிநேர நீண்ட விமானப் பயணத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் அவர்கள் ஜிம்பாப்வேயை சென்றடைந்தனர்.
ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் நிறுவனம் அல்லது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கு சரியான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன்படி, ஹோட்டலின் அறை இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதால், அவர்கள் ஹோட்டலின் பிரதான கதவுகளுக்கு அருகில் தரையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் புகைப்படங்களை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் சேர்த்துள்ளனர்.
அவர்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஹோட்டலின் தரையில் அமர்ந்திருந்தனர்.
இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு மற்றொரு அணி வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்ததையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் சிக்கலை சரி செய்ய முடிந்ததாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.