பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு ‘சேர்’ பட்டம்: பிரிட்டன் மன்னரின் உயரிய கௌரவம்
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2026-ஆம் ஆண்டிற்கான பிரித்தானிய மன்னரின் உயரிய ‘நைட்’ (Knight Bachelor) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உயர்கல்வித் துறையில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கக் கொள்கைகளை (Inclusion) முன்னெடுத்தமைக்காக இந்த ‘சேர்’ பட்டத்தைப் பெற்றுள்ளார்.
2019-ஆம் ஆண்டு லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராகப் பொறுப்பேற்ற இவர், 69 சதவீத சிறுபான்மை இன மாணவர்களைக் கொண்ட ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த கல்விச் சூழலை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக, பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியதுடன், அகதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட கல்வியாளர்களுக்குத் தஞ்சம் அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இந்த கௌரவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது கல்வியின் வலிமைக்குச் சான்று’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.





