ஐ.நாவின் 51/1 தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் – விஜித ஹேரத்
நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மான வரைபுக்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் வரைவு தீர்மானத்தின் 51/1 தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், வெளி சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் அதிகாரத்தை நீட்டிக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாது எனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் தெரிவித்தார். .
மேற்படி பிரேரணை நிராகரிக்கப்பட்ட போதிலும், உள்ளுர் நடைமுறைகளின் ஊடாக நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை உறுதியாக நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்ய அரசாங்கம் புதிய நடவடிக்கையை மேற்கொள்ளும். அது தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய நடவடிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
“மனித உரிமைகள் பேரவை மற்றும் வழக்கமான மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் இலங்கை தொடர்ந்து கூட்டுறவு மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடும்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.