இலங்கை: தபால் மூலம் வாக்களிப்பு! பொய்யான வாக்குறுதிகளுக்கு எதிராக அமைச்சர் எச்சரிக்கை
தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாமல் தபால் மூலம் வாக்களிக்கும் போது அவதானமாக இருக்குமாறு அரசாங்க ஊழியர்களிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்தந்த அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதிலும் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லை.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளடக்கப்படுவதற்குப் பொருத்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
“விஞ்ஞாபனம் வெளியிடப்படுவதற்கு முன்னர் நிபுணர் குழு அறிக்கை பெறப்பட்டது. அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, கொள்கை முடிவாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. வழங்குவதை மட்டுமே நாங்கள் குறிப்பிட்டோம். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விவாதித்த பிறகு வரும் நாட்களில் வரிச் சலுகைகள் வழங்கப்படும்” என்று அவர் விளக்கினார்.
எனவே போலியான தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு மயங்க வேண்டாம் என எச்சரித்த அமைச்சர், தபால் மூல வாக்களிப்பின் போது அவதானமாக செயற்படுமாறு அரசாங்க ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.
“அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு மேலதிக நிதியாக மொத்தம் 250 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும், இது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் நிர்வகிக்கப்படும்.
“இதன் விளைவாக, அரசாங்க ஊழியர்களுக்கான அனைத்து சம்பள உயர்வுகளும் ஜனவரி 1, 2025 முதல் அமுல்படுத்தப்படும். இந்த முன்மொழிவு வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை” என்று பிரேமஜயந்த கூறினார்.