இலங்கை: இரண்டு வெவ்வேறு கொலைகள் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பதிவாகிய இருவேறு கொலைகள் தொடர்பில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம், ஓயாமடுவ, பண்டாரகம பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரிய பொருளால் தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக ஓயாமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர், சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர். ஓயாமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் 45 வயதுடைய நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இரட்டை கெப் வண்டியில் வந்த குழுவொன்று கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்திய டபுள் கெப் வண்டியுடன் வவுனியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.