இலங்கை: முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் இருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் பறிமுதல்
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான BMW ரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அனிவத்தை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் 60 மில்லியன் ரூபா மற்றும் சொகுசு SUV ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று குறித்த சொத்திலுள்ள கரேஜை பரிசோதித்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களையும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வாகனங்கள் தொடர்பாக வீட்டில் உள்ள எவரும் சட்டப்பூர்வ உரிமை கோர முடியாததால், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டின் உரிமையாளர் கண்டி மஹாயாவ பிரதேசத்தில் கார் விற்பனையை நடத்தி வருவதுடன், ரோஹித அபேகுணவர்தன துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையில் உயர் அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
இந்த இரண்டு வாகனங்களும் சட்டவிரோதமான முறையில் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சொகுசு வாகனங்களும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.