இலங்கை: ஆயர் ஜெரோம் நாவலப்பிட்டிக்கு பயணம் செய்ததால் ஏற்பட்ட பதற்றம்
நாவலப்பிட்டி மீபிட்டிக்கு இன்று விஜயம் செய்த இலங்கை ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நாவலப்பிட்டி பொலிஸார் தலையிட்டு பாதிரியாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தணித்தனர்.
புனர்வாழ்வு நிலையத்தை நிர்மாணிப்பதாகக் கூறி மத போதகர் மத ஸ்தலத்தை கட்டியெழுப்புவதாகவும், இது தொடர்பில் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற கிராமம் என சுட்டிக்காட்டிய கிராம மக்கள், நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.