இலங்கை: வாகன விபத்தில் வீதியில் நடந்து சென்ற மாணவி மற்றும் லொறி சாரதி மரணம்

ஹொரவ்பொத்னை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் உள்ள அலப்பத்தாவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் சாரதி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரவ்பொத்னை – மொரக்கேவ சிங்கள மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயது சிறுமியும் 27 வயதுடைய சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவின் மொரக்கேவ சந்தியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அலப்பத்தாவ பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடிகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் லொறி வீதியை விட்டு விலகி அருகிலுள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
ரிதிகஹவெவ மொரக்கேவ வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயது மாணவி சதாசி விஹன்சா, பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் லொறி மோதியதாகவும் தெரிய வருகிறது.
லொறியில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் ஹொரவ்பத்தானை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
உயிரிழந்த மாணவி மற்றும் சாரதியின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.