இலங்கை : VATவரி, வாகன இறக்குமதி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக பெறுமதி சேர் வரி (VAT) வசூல் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வரி இணக்கம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் விரிவான டிஜிட்டல் முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இங்கு கார் இறக்குமதி, நிறுத்திவைக்கும் வரி மற்றும் VAT வசூல், டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை கருத்திற்கொண்டு இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
வருமான வரிக்கு உட்படாத ஓய்வூதியதாரர்களுக்கு அறவிடப்படும் நிறுத்திவைப்பு வரிகளை மீள வழங்குவதற்கான இலகுவான செயற்பாடுகளை அமைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, நாடு படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கப்படும் நன்மைகளை அதிகரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.