சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுக்க இலங்கை தயார்!
சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03) நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
“அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அதற்காக நிறுவன மட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவோம் .”
இவ்வாறு மேற்படி சந்திப்பின்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான உலகளாவிய கொள்கைகளை நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) உருவாக்குகிறது.
மேலும், பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான கொள்கைகளையும் இது உருவாக்குகிறது.
அதன்போது, அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய 40 பரிந்துரைகளை நிதி நடவடிக்கை பணிக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்க ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ள கட்டமைப்புகள், அவை வினைத்திறனாக செயல்படுத்தப்பட்டுள்ள விதம் – சட்டக் கட்டமைப்பு, வள ஒதுக்கீடு, செயல்திறன் மற்றும் தரப்பினர்களின் இயலுமை உள்ளிட்ட அளவுகோல்கள் தொடர்பாக ஆழமான பகுப்பாய்வு இடம்பெறும். இந்த செயல்முறை பரஸ்பர மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது.
இது ஒரு தேசிய அளவிலான கணக்காய்வு செயல்முறை என்பதுடன், குறித்த பிராந்திய மேற்பார்வை நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
அதன்படி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவினால் இலங்கையில் அந்த மதிப்பீட்டு மேற்பார்வை செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கான ஆலோசனையை அதன் முன்னாள் நிறைவேற்றுச் செயலாளரான கலாநிதி Gordon Hook வழங்குகிறார்.
உள்நாட்டில் இந்தச் செயல்பாட்டிற்காக சுமார் 25 தரப்பினர் அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதுடன்,மேலும் அதன் ஒருங்கிணைப்புப் பணிகள், இலங்கை மத்திய வங்கியில் நிறுவப்பட்ட நிதி புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான செயற்பாட்டுக் குழுவினால், குறித்த மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது இந்த தரப்பினர்களால் செயல்படுத்தப்பட வேண்டிய செயல் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.
இலங்கை இதற்கு முன்பு 2006 மற்றும் 2014-2015 ஆம் ஆண்டுகளில் இந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டதுடன், அதில் பின்னடைவை சந்தித்து 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கருப்புப் பட்டியலில் (Greylisted) சேர்க்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச அளவில் இலங்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வலுவான அரசியல் தலைமையை வழங்குவதால், இந்த திட்டத்தை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதி வெற்றிபெறச் செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.
நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தாமதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த விடயங்களை தாமதப்படுத்தாமல் தேவையான தொழில்நுட்ப திருத்தங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.
இந்த மதிப்பீட்டு செயல்முறையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சிறப்பு செயலணியின் (Task Force) அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.





