சுற்றுலாத்துறையில் உச்சம் தொட்டது இலங்கை: அமைச்சர் பெருமிதம்!
சுற்றுலாப் பயணிகளின் வருகைமூலம் கடந்த வருடம் 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று (5) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாக இலங்கைக்கு அதிகளவு அந்திய செலாவணி கிடைக்கப்பெறுகின்றது.
அந்தவகையில் இலங்கை வரலாற்றில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டு பதிவானது.
23 லட்சத்து 63 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
டித்வா பேரிடரால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பாரக்கப்பட்டது.
எனினும், நாம் உரிய தலையீடுகளை மேற்கொண்டதால் கடந்த வருடத்தைவிடவும் இம்முறை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கடந்த வருடம் 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரதிபலமாக இந்த பலன் கிடைத்துள்ளது.
அதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் அந்திய செலாவணிகளை அனுப்புகின்றனர்.
அந்தவகையில் அதிகூடிய அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்ற வருடமாகவும் 2025 பதிவானது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.





