இலங்கை: பாதுகாப்பு அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைந்து தாயகத்தை சிறந்த தேசமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய பாதுகாப்பு அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று (22) விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர்.
வரவேற்பைத் தொடர்ந்து, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி, அங்கு அமைச்சின் தற்போதைய மற்றும் எதிர்கால முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.
புதிய அரசாங்கம் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவை நாடுவதாகவும் ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களின் அதிகாரம் வலுவாக உள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சமீபத்திய ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வழங்கப்பட்ட ஆணைகளின் கலவை மற்றும் முடிவுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த தேர்தலில் அரசாங்கம் ஏறக்குறைய 80% பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், இது மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசியல் அதிகாரம் என்ற ரீதியில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தேவையான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தமது அரசாங்கத்திற்கு இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தினார். இந்த இலக்குகளை நனவாக்குவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் எதிர்பார்க்கும் இந்த புதிய மாற்றத்தில், அரச சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தாமல் முன்னேற்றத்தை அடைய முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார். ஒவ்வொரு வளர்ந்த தேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது பொதுச் சேவையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகோந்த, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எச்.எல்.வி.எம்.லியனகே, விமானப்படைத் தளபதி எயார். மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.