இலங்கை : சொகுசு வாகனங்களையும், வாசஸ்தலங்களையும் தவிர்க்கும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
அதிக அளவில் பயன்படுத்தப்படாத சொகுசு வாகனங்கள் இருப்பதாகக் கூறிய சபாநாயகர் டாக்டர் ஷோக ரன்வல, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் குறைந்த எரிபொருள் திறன் காரணமாக சொகுசு வாகனங்களைப் பயன்படுத்த மறுப்பதாக கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறைந்த எரிபொருள் திறன் கொண்ட சொகுசு வாகனங்கள் இலங்கைக்கு பொருத்தமற்றவை. இதுவரை பாராளுமன்றத்தினூடாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சொகுசு வாகனங்களை கோரவில்லை என தெரிவித்தார்.
“எரிபொருளைச் சிக்கனப்படுத்தாததாலும், இந்த நாட்டிற்குப் பொருந்தாததாலும் பயன்படுத்தப்படாமலேயே ஏராளமான சொகுசு வாகனங்கள் பூங்காக்களில் உள்ளன. பெரும்பாலான எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த வாகனங்களை பயன்படுத்த மறுக்கின்றனர்.
சபாநாயகருக்கும் ஏராளமான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக எரிபொருள் நுகர்வு காரணமாக நாங்கள் இன்னும் அவற்றில் எதையும் பயன்படுத்தவில்லை, ”என்று கூறியுள்ளார்.
அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப தியாகம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.
அந்த வாகனங்கள் விற்று தீர்ந்துவிடுமா என்று கேட்டபோது, அந்த சொகுசு வாகனங்களை ஏலம் விடுவது தேசிய அளவிலான முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை கோரவில்லை எனத் தெரிவித்த சபாநாயகர் ரன்வல, அரசாங்கத்திற்குச் சொந்தமான வீடுகள் அமைச்சரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு அல்ல, பொது விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.