இலங்கை : தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை முன்னதாக பணி இடையூறுகள் காரணமாக வைத்தியர்களுக்கான வருகை கொடுப்பனவு (DAT) கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் பண நிதியை வழங்குவதற்கு திறைசேரி ஏற்பாடு செய்யவில்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
திறைசேரியில் இருந்து பிரச்சினை தீர்க்கப்படும் வரை அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடிதம் மூலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.