போர்காலத்தைவிடவும் ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை – மஹிந்த கட்சி குற்றச்சாட்டு!
போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டுமென துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இக்காலப்பகுதியில் புலிகள்கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால் ஜே.வி.பி. ஆட்சியின்கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தமாகும்.
நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்வதற்காக பாதாள குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் நாய், பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. பாதாள குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.





