சுகாதாரத் துறையில் ஒரு வார கால அவசர நிலை பிரகடனம்
நாட்டில் நிலவும் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகளின் தேவையை உறுதிப்படுத்துவதற்கு
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இன்று (நவம்பர் 28) முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குச் சுகாதாரத் துறையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையில், நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் 24 மணி நேரமும் நோயாளர் பராமரிப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனை பணிப்பாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள், தடையற்ற சேவைகளை வழங்கும் வகையில் பணியாளர் திட்டங்களைத் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகள், மருத்துவ ஆலோசனையின் பேரில் பாதுகாப்பாக வீடு திரும்பக்கூடிய நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சேதமடையக்கூடிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர் பராமரிப்புப் பிரிவுகளை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ வாயுக்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரகால நிலைமைகள் ஏற்பட்டால், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளவர்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய, அருகிலுள்ள வசதிகளுடன் கூடிய இடங்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




